search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமாரசாமி பதவி ஏற்பு"

    கர்நாடக மாநிலத்தின் 24-வது முதல் மந்திரியாக இன்று பொறுப்பேற்று கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #kumaraswamy #Modicongratulates
    புதுடெல்லி:

    கவர்னரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று (புதன்கிழமை) பதவி ஏற்றார். பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன்பகுதியில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4:30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. 

    குமாரசாமியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பதவி ஏற்றவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

    இன்றைய பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சட்டசபையில் ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அதன்பிறகு மற்ற மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரியாக இன்று பொறுப்பேற்று கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அவர்களின் பதவிக்காலம் சிறப்பாக அமைய நல்லாசிகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #kumaraswamy #Modicongratulates 
    ×